பழமொழி: தெளியானைத் தேறல் அரிது
ஆறாச் சினத்தன் அறிவிலன் மற்றவனை
மாறி யொழுகல் தலையென்ப – ஏறி
வளியால் திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப!
தெளியானைத் தேற லரிது.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
ஆறாச் சினத்தன் அறிவு இலன்; மற்று அவனை
மாறி ஒழுகல் தலை என்ப;-ஏறி
வளியால் திரை உலாம் வாங்கு நீர்ச் சேர்ப்ப!-
தெளியானைத் தேறல் அரிது.
பொருள் விளக்கம்:
ஆற்றமாட்டாத சினம் கொண்டவர் அறிவற்ற மூடர்; அவரை விட்டுவிலகி வாழ்வதே நன்மைதரும் (என்பது பெரியோர் வாக்கு). காற்று நீரை வளைத்து வீசுவதால் கரைமேல் அலை உலவும் நாட்டைச் சேர்ந்தவரே, தெளிவற்ற சிந்தனை உடையவரை நம்புதல் நன்மை தராது.
பழமொழி சொல்லும் பாடம்: கடுஞ்சினத்தை கட்டுப்படுத்தத் தெரியாத அறிவற்றவரின் உறவைத் தவிர்க்க வேண்டும். ஆற்றமாட்டாத சினங்கொண்டவருடன் கொள்ளும் உறவு அவரைச் சேர்ந்தவரையும் அழித்துவிடும் என்பதை,
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். (குறள்: 306)
சினம் என்னும் அழிவுதரும் குணம் அவரைத் தெப்பம் போலக் காக்கும் சுற்றத்தையும் அழித்துவிடும் என வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=61512
No comments:
Post a Comment