பழமொழி: மச்சேற்றி ஏணி களைவு
எய்ப்புழி வைப்பாம் எனப்போற்றப் பட்டவர்
உற்றுழி ஒன்றுக் குதவலார், பைத்தொடீஇ!
அச்சிடை யிட்டுத் திரியின், அதுவன்றோ
மச்சேற்றி ஏணி களைவு.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
‘எய்ப்புஉழி வைப்பாம்’ எனப் போற்றப்பட்டவர்
உற்றுழி ஒன்றுக்கு உதவலராய்,-பைத்தொடீஇ!-
அச்சு இடையிட்டுத் திரியின், அது அன்றோ,
மச்சு ஏற்றி, ஏணி களைவு.
பொருள் விளக்கம்:
சோதனைக்காலத்தில் உதவும் வைப்புநிதி போலக் காப்பாற்றுவார் எனக் கருதப்பட்ட உற்றார், நமக்கு இடையூறு நேர்ந்த பொழுது ஒருவகையிலும் உதவாமல் கைவிடும் செயலானது, பசும்பொன்வளையல்களை அணிந்த பெண்ணே! அச்சம் கொண்டு மறுத்துவிடும் அவரதுசெயலானது அல்லவோ, மாடியில் ஏற்றிவிட்ட பின்னர் இறங்க வழியின்றி ஏணியை அகற்றி விடுவதற்கு ஒப்பானது.
பழமொழி சொல்லும் பாடம்: உதவுவேன் என நம்பவைத்து, உதவி கிடைக்கும் என நம்பி வந்த ஒருவரை, அவர் இடருற்ற நேரத்தில் ஏமாற்றாது உதவுவதே நற்பண்பு கொண்ட ஒருவரின் கடமை. இப்பண்பு இல்லாத, இடருற்ற காலத்தில் உதவாத ஒருவரின் உறவு இருப்பதைவிட இல்லாதிருப்பதே நலம் என்பதை வள்ளுவர்,
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை. (குறள்: 814)
போர்க்களத்தில் உதவ வேண்டிய முக்கியமான நேரத்தில், உதவாது கீழே தள்ளிவிட்டு ஓடிவிடும் மடத்தனம் கொண்ட குதிரையைப் போன்றவர் உறவை பெற்றிருப்பதைக் காட்டிலும் தனித்திருப்பதே சிறப்பு என்று கூறுகிறார்.
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=62766
No comments:
Post a Comment