பழமொழி: அறிவினை ஊழே அடும்
சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்
பட்ட விருத்தம் பலவானால், – பட்ட
பொறியின் வகைய கருமம் அதனால்
அறிவினை ஊழே அடும்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
சுட்டிச் சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும்,
பட்ட விருத்தம் பலவானால், பட்ட
பொறியின் வகைய கருமம், அதனால்,-
அறிவினை ஊழே அடும்.
பொருள் விளக்கம்:
குறிப்பிட்டுச் சொல்லப்படும் பெரிய அறிஞர்கள் இடத்திலும் உள்ள குற்றங்கள் பலவாக இருக்குமானால், (அது அவர்களது) முன்வினைப்பயன் செய்த செயலாகும். ஆகையினால் அறிவினை விதி அழித்து பேதைமையாக்கும்.
பழமொழி சொல்லும் பாடம்: பேரறிவு கொண்டோரும் விதியின் காரணத்தால் மதியிழந்து குற்றம் செய்வார்கள். 'விநாச காலே விபரீத புத்தி' என்பது வடமொழி கூறும் வழக்கு. ஒருவர் கெடும் நேரம், காலம் வந்தால் மதிகெட்டு குற்றமிழைத்து அழிந்து போவார்கள். பிறர் போற்றும் அறிஞர்களும் தவறு செய்வதற்கு அவர்களது தலையெழுத்தே காரணம், விதியின் வழி அவர்களது மதி சென்றது என்பதைத் திருக்குறள்,
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. (குறள்: 372)
ஒருவர் சிறுமைப்பட வேண்டிய விதியிருந்தால் அவர்கள் அறிவழிந்து போவார்கள், அதுவே அவர்கள் சிறப்படைய வேண்டிய நேரமாக இருக்குமானால் அறிவாற்றலால் உயர்வடைவர் என்று விளக்குகிறது.
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=64341
No comments:
Post a Comment