பழமொழி: இளையோனே யாயினும் மூத்தானே யாடுமகன்
கற்றதொன் றின்றி விடினும் கருமத்தை
அற்ற முடிப்பான் அறிவுடையான்: – உற்றியம்பும்
நீத்தநீர்ச் சேர்ப்ப! இளையானே யாயினும்
மூத்தானே யாடு மகன்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
கற்றது ஒன்று இன்றிவிடினும், கருமத்தை
அற்றம் முடிப்பான் அறிவுடையான்; உற்று இயம்பும்;-
நீத்த நீர்ச் சேர்ப்ப!-இளையானே ஆயினும்,
மூத்தானே, ஆடு மகன்.
பொருள் விளக்கம்:
முறையான கல்வியறிவைப் பெற்றிராவிட்டாலும், செய்ய வேண்டிய செயலைச் சோம்பலின்றி செய்து முடிப்பவர்தான் அறிவுடையவர் ஆவார். நிறைந்து ஆர்ப்பரிக்கும் வெள்ளப் பெருக்கெடுத்த நீர்நிலைகளைக் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, இளவயதினராக இருப்பினும் முதிர்ச்சி அடைந்தவராகவே கருதப்படுவார் சிறப்பாகச் செயலாற்றுபவர்.
பழமொழி சொல்லும் பாடம்: கல்வியறிவு இல்லாதிருப்பினும் திறம்படச் செயலாற்றுபவரே அறிவுடையவர் எனக் கருதப்படுவார். ஏற்றுக் கொண்ட செயலை முடிக்கும் பொருட்டு இடைவிடாது நல்ல முயற்சி செய்யும் ஆள்வினை உடையவரே அறிவுடையவர் என்பதை வள்ளுவர்,
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. (குறள்: 618)
செய்யவேண்டிய சூழ்நிலையோ வாய்ப்போ இல்லாதிருப்பது ஒரு குறையல்ல, ஆனால் அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாமையே ஒருவருக்குப் பெரும்பழியைத் தரும் என்கிறார்.
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=62961
No comments:
Post a Comment