பழமொழி: செய்தானை ஒவ்வாத பாவையோ இல்
செயிரறு செங்கோல் சினவேந்தன் தீமை
பயிரறு பக்கத்தார் கொள்வர் - துகிர்புரையும்
செவ்வாய் முறுவனற் சின்மொழியாய்! செய்தானை
ஒவ்வாத பாவையோ வில்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
செயிர் அறு செங்கோல் சின வேந்தன் தீமை
பயிர் அறு பக்கத்தார் கொள்வர்;-துகிர் புரையும்
செவ்வாய் முறுவல் நல் சில் மொழியாய்!-செய்தானை
ஒவ்வாத பாவையோ இல்.
பொருள் விளக்கம்:
குற்றமற்ற செங்கோலை ஏந்திய, சினம் கொண்ட மன்னவன் இழைக்கும் தீமைக்கு, குற்றமற்ற, அருகில் உள்ள அமைச்சர்களே பொறுப்பாவார்கள். பவளம் போன்ற செவ்விதழ் கொண்ட வாயில் புன்முறுவல் துலங்க இனிய சில மொழிகளைக் கூறும் பெண்ணே, (இது எவ்வாறெனில்) ஓவியர் தம் மனது விரும்பாத ஓவியத்தை வரைவதில்லை அன்றோ.
பழமொழி சொல்லும் பாடம்: ஓவியர் விரும்பியது போலவே அவர் தனது ஓவியப்பாவையை வரைவார், அது போல அமைச்சர் வழி நடத்துவதற்கு ஏற்பவே அரசனின் செயல்கள் அமையும். எனவே, அரசன் செய்யும் தீங்குகளுக்கு அருகிருந்து அவனை இடித்துரைத்துத் திருத்த வேண்டிய அமைச்சர்களே பொறுப்பாவார். அறிவுரை கூறவேண்டியவர் கடமையைப் பற்றிக் கூறும் வள்ளுவர்,
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன். (குறள்: 638)
அறிஞர் சொல்லும் அறிவுரையையும் கேட்காத, சொந்த அறிவும் இல்லாத மன்னவனுக்கு, உடனிருக்கும் அமைச்சரே நல்வழி காட்டி அறிவுறுத்தக் கடமைப் பட்டவர் என்று கூறுகிறார்.
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=64730
No comments:
Post a Comment