பழமொழி: தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல்
தக்காரோ டொன்றித் தமராய் ஒழுகினார்
மிக்காரா லென்று சிறியாரைத் தாம்தேறார்
கொக்கார் வளவய லூர! தினலாமோ
அக்காரம் சேர்ந்த மணல்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
‘தக்காரோடு ஒன்றி, தமராய் ஒழுகினார்;
மிக்காரால்’ என்று, சிறியாரைத் தாம் தேறார்;-
கொக்கு ஆர் வள வயல் ஊர!-தினல் ஆமோ,
அக்காரம் சேர்ந்த மணல்?
பொருள் விளக்கம்:
மதிக்கத்தக்கப் பண்பிற் சிறந்தோருடன் இணைந்து, அவர்களில் ஒருவராகவே செயல்படுகிறார். (ஆகவே) இவரும் குணம் மிக்கவரே என்றெண்ணி சிறுபுத்தி உடையவர் தம்மை நட்புக்காகத் தேர்ந்தெடுப்பவரில்லை. *கொக்குகள் இரை தேடிவரும் நீர்வளம் கொண்ட வயல்கள் கொண்ட ஊரைக் கொண்டிருப்பவரே, தின்னுவோமா நாம் சர்க்கரையுடன் கலந்துவிட்ட மணலை?
பழமொழி சொல்லும் பாடம்: சிறுமைப்பண்புடையோர் ஒருவர் சான்றோர் மத்தியில் பழகிவந்தாலும், அவரது இழிகுணத்தின் காரணமாக அவரது தொடர்பை அறிவுடையவர் விரும்புவாரில்லை. இனிமையான சர்க்கரையுடன் கலந்து விட்டதால், அந்த மணலும் இனிப்பாகவே இருக்கும் என்று ஒருவரும் கருதி மணலை உண்ண விரும்பாததைப் போலவே, தீயோர் சான்றோர் தொடர்பில் இருந்தாலும், அவரை யாரும் விரும்ப மாட்டார். பண்பு நிறைந்தோரோடு சேர்ந்து வாழும் வாய்ப்பினைப் பெற்றிருந்தாலும், பண்பற்றோர் தமது குணத்தை உயர்த்திக் கொள்ளாது தங்கள் இயல்பிலேயே சிறுமைக் குணத்துடன் இருப்பார்கள் என்பதை மற்றொரு பழமொழிப்பாடலும் குறிக்கிறது. இத்தகையவர்களை வள்ளுவர்,
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது. (குறள்: 823)
அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராக வாழாமல் பண்பற்றவர்கள் தனது சிறுமைக் குணத்தைக் கைவிடாதவர்களாக இருப்பார்கள் என்றும், ‘நட்பாராய்தல்’ அதிகாரத்தின் குறளில்,
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. (குறள்: 793)
ஒருவரின் குணம், நற்குடிப்பிறப்பு, குற்றங்கள், அவருடைய குற்றத்தொடர்பற்ற உறவுகள் ஆகியவற்றை ஆராய்ந்தபின்னரே ஒருவரிடம் நட்பு பாராட்ட வேண்டும் என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
* “வள வயல்” என்னும் குறிப்பினால் நீர்வளம் கொண்ட வயலில் மீன்களை இரையாகத் தேடி “கொக்குகள்” வருவதாக இரு உரை நூல்கள் பொருள் கொள்கின்றன, மேலும் இரு உரை நூல்கள் கொக்கு என்பதற்கு “மாந்தோப்பு” என்ற பொருளைக் காட்டி, மாந்தோப்புகளும், வயல்வளமும் நிறைந்த மருத நாட்டுத் தலைவன் அறிவுரை பெற்றதாகக் குறிக்கின்றன.
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=62309
No comments:
Post a Comment