Wednesday, September 30, 2015

2 - கல்லாதான் கண்ட கழிநுட்பம்

பழமொழி: வினா முந்துறாத உரை இல்லை
பழமொழி: கனா முந்துறாத வினை இல்லை



கல்லா தான் கண்ட கழி நுட்பங் கற்றார்முற்
சொல்லுங்காற் சோர்வு படுதலா – னல்லாய்
வினாமுந் துறாத வுரையில்லை யில்லைக்
கனாமுந் துறாத வினை.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால், சோர்வு படுதலால், நல்லாய்
வினா முந்துறாத உரை இல்லை;-இல்லை,
கனா முந்துறாத வினை.

பொருள் விளக்கம்:
முறையாகக் கல்வியைக் கற்றிராத கல்லாதவர் ஒருவர் மிக நுட்பமான மெய்ப்பொருளினை அறிந்து கொண்டாலும், அதனைக் கற்றார் முன் விளக்கிக் கூறுவதற்கு தக்க கல்வியறிவினைப் பெறாததால் அவர் கூற்று முக்கியத்துவம் பெறாமல் போகும். நற்பண்புகள் அமைந்த பெண்ணே, கேள்வி கேட்பதற்குமுன் அதற்குரிய பதில் எழுவதில்லை, ஒன்றை விரும்பிக் கனவு காணாது அதற்கேற்ற செயல் துவங்குவதில்லை (அவ்வாறே, அடிப்படைக் கல்வியற்றவர் தக்க அறிவு பெற்றிருக்கவும் வழியில்லை என அறிவாயாக)

பழமொழி சொல்லும் பாடம்: சிறந்தவகையில் பொருள் புரிந்து கொள்ள அதற்கேற்ற முறையான அடிப்படைக் கல்வியைக் கற்றிருத்தல் அவசியம், கல்வியின்றி நுண்ணறிவு பெறுதல் இயலாது. டாக்டர் அப்துல் கலாம் சொன்ன “கனவு காணுங்கள்” என்பதன் அடிப்படையைக் காட்டுகிறது “கனா முந்துறாத வினை இல்லை” என இப்பாடல் கூறும் பழமொழி. குறிக்கோளினை எண்ணியபிறகுதான் அதை அடையும் செயல் துவங்குகிறது. பதில் வருவதற்குக் காரணம் அதற்கேற்ற கேள்வி எழும்புவது. தக்க அடிப்படைக் கல்வி இல்லாத பொழுது ஆராயும் மனப்பான்மை பெறாத காரணத்தினால் கண்டுகொண்ட நுட்பத்தின் அடிப்படையும் விளங்காது. பல அறிவியல் நிகழ்வுகளை அறிந்திருந்தாலும் அது ஏன் நிகழ்கிறது என்ற அடிப்படைப் புரிதல் இல்லாதவர்களைக் கொண்டு இக்கூற்றைப் புரிந்து கொள்ளலாம். அதனால் இயற்கையறிவு பெற்றிருப்பினும் நுண்பொருளை அறிவதற்குத் தக்க அடிப்படைக் கல்வி தேவை என்பதை விளக்குகிறது இப்பழமொழிப் பாடல். தேவையான கல்விப் பயிற்சியின்றி கற்றோரை எதிர்கொள்வதை வள்ளுவர்,

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். (குறள்: 401)

தேவையான நூல்களைக் கற்று கல்வியைப் பெறாத ஒருவர் கற்றறிந்த சான்றோருடன் கலந்துரையாடுவது, விளையாட்டிற்குத் தேவையான கட்டங்களை வரைந்து கொள்ளாமல் தாயக்கட்டையை உருட்ட முற்படுவதற்கு ஒப்பாகும் என்கிறார். அத்தகையவர் நிலையை,

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். (குறள்: 405)

கல்லாத ஒருவர் கற்றறிந்த மேதைகள் முன்னிலையில் எல்லாம் அறிந்தவர் போல உரையாட முற்படும்பொழுது அவரது உண்மையான அறிவுத் தகுதி எளிதில் வெளிப்பட்டுவிடும் என்கிறார்.



நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=66038

4 - கேட்பாரை நாடி கிளக்கப்படும்

பழமொழி: வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர்
பழமொழி: தோற்பனகொண்டு புகாஅர் அவை



கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண்
வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர் – வேட்கையால்
வண்டு வழிபடரும் வாட்கண்ணாய்! தோற்பன
கொண்டு புகாஅ ரவை.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
கேட்பாரை நாடி, கிளக்கப்படும் பொருட்கண்
வேட்கை அறிந்து, உரைப்பார் வித்தகர்;-வேட்கையால்
வண்டு வழி படரும் வாள் கண்ணாய்!-தோற்பன
கொண்டு புகாஅர், அவை.

பொருள் விளக்கம்:
சொல்வதைக் கவனமுடன் கேட்கக் கூடியவரிடம் சென்று, தான் சொல்வதைக் கேட்பதிலும் அவருக்கு விருப்பம் இருக்குமா எனத் தெரிந்து கொண்டு சொல்பவரே அறிவாளி. விருப்பத்துடன் வண்டு (மலரென நினைத்து) மொய்க்க வரும் ஒளிபொருந்திய மலர்களை ஒத்த கண்களைக் கொண்ட பெண்ணே! சபை ஏறாது தனது கருத்து என்று தெரியுமாயின் அவையினரிடம் கொண்டு செல்லத் தேவையில்லை.

பழமொழி சொல்லும் பாடம்: அறிவாளிகள் விரும்பிக் கேட்கக் கூடியவர்களிடம் மட்டுமே சென்று தனது கருத்தைக் கூறுவார், சபை ஏற்காது புறக்கணிக்கும் என்று தெரியுமாயின் கருத்துகளைச் சொல்ல முற்படார். இக்கருத்தைக் கூறும் வள்ளுவரின் வாக்கு,

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். (குறள்: 711)

சொற்களின் திறன் அறிந்த அறிஞர்கள், அவற்றை அவையினரின் தரமறிந்து, சபையின் தன்மைக்கு ஏற்ப சொல்லுவர் என்று குறிப்பிடுகிறது.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=60664

18 - தக்காரோடு ஒன்றி தமராய் ஒழுகினார்

பழமொழி: தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல் 


தக்காரோ டொன்றித் தமராய் ஒழுகினார்
மிக்காரா லென்று சிறியாரைத் தாம்தேறார்
கொக்கார் வளவய லூர! தினலாமோ
அக்காரம் சேர்ந்த மணல். 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து:
‘தக்காரோடு ஒன்றி, தமராய் ஒழுகினார்;
மிக்காரால்’ என்று, சிறியாரைத் தாம் தேறார்;-
கொக்கு ஆர் வள வயல் ஊர!-தினல் ஆமோ,
அக்காரம் சேர்ந்த மணல்?

பொருள் விளக்கம்:
மதிக்கத்தக்கப் பண்பிற் சிறந்தோருடன் இணைந்து, அவர்களில் ஒருவராகவே செயல்படுகிறார். (ஆகவே) இவரும் குணம் மிக்கவரே என்றெண்ணி சிறுபுத்தி உடையவர் தம்மை நட்புக்காகத் தேர்ந்தெடுப்பவரில்லை. *கொக்குகள் இரை தேடிவரும் நீர்வளம் கொண்ட வயல்கள் கொண்ட ஊரைக் கொண்டிருப்பவரே, தின்னுவோமா நாம் சர்க்கரையுடன் கலந்துவிட்ட மணலை?

பழமொழி சொல்லும் பாடம்: சிறுமைப்பண்புடையோர் ஒருவர் சான்றோர் மத்தியில் பழகிவந்தாலும், அவரது இழிகுணத்தின் காரணமாக அவரது தொடர்பை அறிவுடையவர் விரும்புவாரில்லை. இனிமையான சர்க்கரையுடன் கலந்து விட்டதால், அந்த மணலும் இனிப்பாகவே இருக்கும் என்று ஒருவரும் கருதி மணலை உண்ண விரும்பாததைப் போலவே, தீயோர் சான்றோர் தொடர்பில் இருந்தாலும், அவரை யாரும் விரும்ப மாட்டார். பண்பு நிறைந்தோரோடு சேர்ந்து வாழும் வாய்ப்பினைப் பெற்றிருந்தாலும், பண்பற்றோர் தமது குணத்தை உயர்த்திக் கொள்ளாது தங்கள் இயல்பிலேயே சிறுமைக் குணத்துடன் இருப்பார்கள் என்பதை மற்றொரு பழமொழிப்பாடலும் குறிக்கிறது. இத்தகையவர்களை வள்ளுவர்,

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது. (குறள்: 823)

அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராக வாழாமல் பண்பற்றவர்கள் தனது சிறுமைக் குணத்தைக் கைவிடாதவர்களாக இருப்பார்கள் என்றும், ‘நட்பாராய்தல்’ அதிகாரத்தின் குறளில்,

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. (குறள்: 793)

ஒருவரின் குணம், நற்குடிப்பிறப்பு, குற்றங்கள், அவருடைய குற்றத்தொடர்பற்ற உறவுகள் ஆகியவற்றை ஆராய்ந்தபின்னரே ஒருவரிடம் நட்பு பாராட்ட வேண்டும் என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

* “வள வயல்” என்னும் குறிப்பினால் நீர்வளம் கொண்ட வயலில் மீன்களை இரையாகத் தேடி “கொக்குகள்” வருவதாக இரு உரை நூல்கள் பொருள் கொள்கின்றன, மேலும் இரு உரை நூல்கள் கொக்கு என்பதற்கு “மாந்தோப்பு” என்ற பொருளைக் காட்டி, மாந்தோப்புகளும், வயல்வளமும் நிறைந்த மருத நாட்டுத் தலைவன் அறிவுரை பெற்றதாகக் குறிக்கின்றன.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=62309

25 - உரிதினில் தம்மோடு உழந்தமை கண்டு



பழமொழி: பெரிது அகழின் பாம்பு காண்பாரும் உடைத்து


உரிமைதனிற் றம்மோ டுழந்தமை கண்டு
பிரிவின்றிப் போற்றப் படுவார் – திரிவின்றித்
தாம்பெற் றதனா லுவவார் பெரிதகழிற்
பாம்புகாண் பாரு முடைத்து.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
உரிமைதனில் தம்மோடு உழந்தமை கண்டு
பிரிவு இன்றிப் போற்றப் படுவார்; திரிவு இன்றித்
தாம் பெற்றதனால் உவவார்; பெரிது அகழின்,
பாம்பு காண்பாரும் உடைத்து.

பொருள் விளக்கம்:
உரிமையோடு (நண்பர் ஒருவர் தனது துன்பத்திலும்) தன்னோடு வருந்தியதைப் பார்த்து, வேறுபாடு காட்டாது அவரால் பாதுகாக்கப்பட்டவர், நண்பரால் கிடைத்த உதவியை ஏற்று மனவருத்தமின்றி அதனால் நிறைவடைவார். (அவ்வாறு செய்யாமல், அதிக உதவி எதிர்பார்த்தால்) பெரிதும் ஆழமாகத் தோண்டும் பொழுது பாம்பையும் காண நேரலாம் (பேராசையால் பெரும் இழப்பை அடைவது போல, தொல்லை தருவதைத் தாளாது நண்பரும் சீற்றம் அடையக்கூடும்)

பழமொழி சொல்லும் பாடம்: கிடைத்த உதவியில் மனநிறைவு கொள்வது சிறந்த நட்பின் பண்பாகும். பேராசை கொண்டு அதிக உதவி எதிர்பார்த்தால் பெரும் இழப்பினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனையொத்த வழக்குகளாக, ‘புதையல் விரும்பித் தோண்டும் பொழுது பூதம் புறப்பட்டது’ என்றும், ‘எலி பிடிக்கும் எண்ணத்தில் புற்றினைத் தோண்ட பாம்பு கிளம்பியது’ என்றும் கூறும் வழக்கங்களும் உள்ளன. இக்கருத்தை விளக்கும் குறள்,

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். (குறள்: 700)

பலநாள் பழகிய நட்பு என்று உரிமை எடுத்துக் கொண்டு, முறையற்ற செயலைச் செய்தால், அது அந்த நட்பிற்கு கேடு விளைவிக்கும் என்று கூறுகிறது.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=65285

28 - தாம் ஆற்றகில்லாதார் தாம்


பழமொழி: உண்ணோட் டகலுடைப்பார் 



தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத்
தீமாற்றத் தாலே பகைப்படுத்திட் – டேமாப்ப
முன்னோட்டுக் கொண்டு முரணஞ்சிப் போவாரே
யுண்ணோட் டகலுடைப் பார். 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து:
தாம் ஆற்றகில்லாதார், தாம் சாரப்பட்டாரைத்
தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு, ஏமாப்ப
முன் ஓட்டுக்கொண்டு, முரண் அஞ்சிப் போவாரே-
உண் ஓட்டு அகல் உடைப்பார்.

பொருள் விளக்கம்:
தனது சொந்த முயற்சியில் வாழும் திறனற்றவர், தான் வாழ உதவி அடைக்கலம் தருபவரையும் தீயவைக் கூறி பகைத்துக்கொண்டு, (அதனால் தனக்கு ஊறு ஏற்படலாம் என அஞ்சி) பாதுகாப்பிற்காக முன்னரே தப்பியோடி விடுபவர், பகைமை கருதி பயந்து ஓடுபவர், தான் பிச்சை பெற்று உண்ண உதவிய மண்கலத்தை உடைத்தவர் (போன்ற அறிவிலியாவார்)

பழமொழி சொல்லும் பாடம்: தனக்கு வாழ்வாதாரமாக இருப்பவரைப் பகைத்துக் கொள்பவர் அறிவற்றவர். தனக்கு வாழ ஆதரவு தருபவரை தீயவை கூறி பகைத்துக் கொள்ளும் அறிவற்றவரை திருவள்ளுவர் பேதைமை நிறைந்தவர் என்று கூறுகிறார்,

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல். (குறள்: 831)

அறிவற்ற செயல் என்பது எது என்றால், தனக்குத் தீமை தருவதைக் கையாண்டு நன்மையைத் தொலைத்துவிடுவதாகும் என்பது குறள் அறிவுறுத்தும் அறவுரை.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=63149

37 - வைத்ததனை வைப்பு என்று உணரற்க



பழமொழி: எய்ப்பினில் வைப்பென்பது


வைத்ததனை வைப்பென் றுணரற்க தாமதனைத்
துய்த்து வழங்கி யிருபாலு மத்தகத்
தக்குழி நோக்கி யறஞ்செய்க வஃதன்றோ
வெய்ப்பினில் வைப்பென் பது.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
வைத்ததனை வைப்பு என்று உணரற்க! தாம் அதனைத்
துய்த்து, வழங்கி, இரு பாலும் அத் தகத்
தக்குழி நோக்கி, அறம் செய்க!-அஃது அன்றோ,
எய்ப்பினில் வைப்பு என்பது?

பொருள் விளக்கம்:
தாம் தேடி வைத்துள்ள செல்வம் எல்லாம் தளர்வுற்ற பிற்கால பயனுக்காக என்று எண்ண வேண்டாம், தாமும் அப்பொருளைப் பயன்படுத்தி, பிறருக்கும் கொடுத்து உதவி செய்து, இம்மை மறுமை என்ற இரு வகை வாழ்வும் சிறப்படையுமாறு, உதவத்தக்கவர்களுக்கு நிதி வழங்கி நல்லறம் செய்வீர் எனில், அதுவன்றோ கேடு சூழும் காலத்தில் உதவும் சேமநிதி போன்றதாகும்.

பழமொழி சொல்லும் பாடம்: உதவி தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் அறம் செய்வதே இம்மை மறுமை என்ற இருவகை வாழ்வையும் சிறப்படையச் செய்யும். அந்த அறச்செயலே இடருற்ற காலத்தில் உதவும் செல்வம் போன்றது. ஈட்டும் பொருளின் பெருமை அதனைத் தக்கவாறு பயன்படுத்தி அறம் செய்து எவ்வாழ்விலும் சிறப்புற வாழ்வதில்தான் உள்ளது. இம்மைக்கும் மறுமைக்கும் என இரு வாழ்வையும் செய்யும் அறம் சிறப்புறச் செய்யும் என உணர்த்த விரும்பிய வள்ளுவர்,

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. (குறள்: 23)

இம்மை மறுமை என இரு வாழ்வின் தன்மை உணர்ந்து, அறத்தைச் செய்பவரின் பெருமையே உலகில் சிறப்படைகிறது என்கிறார்.



நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=65474

Tuesday, September 29, 2015

43 - மறந்தானும் தாம் உடைய தாம்

பழமொழி: இறந்தது பேர்த்தறிவார் இல் 



மறந்தானுந் தாமுடைய தாம்போற்றி னல்லாற்
சிறந்தார் தமரென்று தேற்றார்கை வையார்
கறங்குநீர் காலலைக்குங் கானலஞ் சேர்ப்ப!
விறந்தது பேர்த்தறிவா ரில். 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து:
மறந்தானும், தாம் உடைய தாம் போற்றின் அல்லால்,
சிறந்தார் தமர் என்று, தேற்றார் கை வையார்;-
கறங்கு நீர் கால் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப!-
இறந்தது பேர்த்து அறிவார் இல்.

பொருள் விளக்கம்:
மறந்தும், (அறிவுடையவர்) தனது பொருளை தானே போற்றிப் பாதுகாப்பதைச் செய்யாமல், சிறந்த உறவினர் இவரென்று தகுதியற்ற ஒருவரிடம் ஒப்படைக்க மாட்டார். ஒலிக்கும் அலைகள் கொண்ட நீர்நிலைகளும், அதன்கண் அழகிய சோலைகளும் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, கைநீங்கிய பொருளை மீட்டுத் தருவதை அறிந்தவர் இல்லை.

பழமொழி சொல்லும் பாடம்: நம்பிக்கைக்குரியவர் இவரென்ற எண்ணத்தில் பிறரிடம் தமது பொருளை ஒப்படைக்காமல் தாமே பாதுகாப்பதுதான் அறிவுடையவர் செயலாகும். நமது கையை விட்டு நீங்கிய பொருள் மீண்டும் கிடைக்கலாம் என்பதை உறுதியாகக் கூற இயலாது. நல்லவர் இவரென்று நம்பிச் செய்வதிலும் பிழை நேரக்கூடும் என்பதை வள்ளுவர்,

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை. (குறள்: 469)

ஒருவருடைய பண்புகளை தெளிவாக அறியாமல், நல்ல செயல் என்று எண்ணிச் செய்யும் செயலிலும் பிழைகள் நேரும் என்கிறார்.

நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=63579

93 - சால மறைத்து ஓம்பிச் சான்றவர்

பழமொழி: முறைமைக்கு மூப்பிளமை இல் 


சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலை கழிந்ததன் பின்றையு – மேலைக்
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான்
முறைமைக்கு மூப்பிளமை யில். 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து:
சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்ப,
காலை கழிந்ததன் பின்றையும், மேலைக்
கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்;-
முறைமைக்கு மூப்பு இளமை இல்.

பொருள் விளக்கம்:
மிகவும் முயன்று மறைத்துப் பேசி, அறிவுடையார் இது குற்றமன்று என்றாலும், காலம் கடந்த பின்னரும், முன்னர் பசுவின் கன்றைக் கொன்றவனை, அவனது தந்தையே தேர்க்காலில் இட்டுக் கொன்றான், (எனவே) நீதி வழங்க முதுமையடைந்தவர் இவர், இளமையானவர் இவர் என்ற பேதம் பார்க்கத் தேவையில்லை.

சிலப்பதிகாரம், புறநானூறு, பழமொழி, மூவருலா, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம் போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மனுநீதிச்சோழனின் கதை இப்பாடலில் எடுத்தாளப்பட்டுள்ளது. அனைவரும் அறிந்த மனுநீதிச்சோழன் கதையினை அடிப்படையாகக் கொண்டு அரசனின் செங்கோன்மை நடுநிலையுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. “முறைமைக்கு மூப்பு இளமை இல்” என்பதற்கு விளக்கமளிக்கும் உரையாசிரியர்கள் வெவ்வேறு முறைகளிலும் விளக்கமளித்துள்ளார்கள்.

கன்றை இழந்த பசு ஒன்று நீதி வேண்டி ஆராய்ச்சிமணியினை அடிக்க, அதன் காரணத்தை விசாரித்து, அந்தப் பசுவின் கன்றின் மீது தேரோட்டிக் கொன்றவன் தனது மகன் என அறிகிறான் அரசன். அமைச்சர்கள் தங்களது நாவன்மையால் அது குற்றமல்ல என மறுக்க முற்படுகிறார்கள். அவர்கள் அரசன் ஆணையை ஏற்று இளவரசனைத் தேர்க்காலில் ஏற்ற மறுத்துப் பின்வாங்கினாலும், அரசன் பசுவுக்கு நீதிவழங்கும் பொருட்டு, கன்றினைக் கொன்ற தனது மகனின் மீது தானே தேரோட்டி பசுவுக்கு நீதி வழங்கினான்.
நீதி வழங்கும்பொழுது குற்றவாளி ஓர் இளவயதினன் என்பதற்காகக் கருணை காட்டவில்லை என்ற வகையிலும் விளக்கமளிக்கப்படுகிறது.

மாற்று விளக்கமாகக் கூறப்படுவது பசு ஆராய்ச்சிமணி அடித்து நீதி கேட்டதைப் பற்றிய கதைக் கருத்தை முன் வைக்கவில்லை. இளவரசன் கன்றினைத் தேரேற்றிக் கொன்றதைக் கற்றறிந்த அமைச்சர்கள் பலவாறு பேசி மறைத்துவிடுகிறார்கள். பின்னொருநாளில் அரசனுக்குத் தனது மகன் இழைத்த குற்றம் தெரிய வருகிறது. காலம் கடந்துவிட்டாலும் முன்னாளில் தனது மகன் செய்த குற்றத்திற்காக, அவன் மீது தேரேற்றி தண்டனை வழங்குகிறான் மன்னவன். காலம் கடந்தாலும் நீதி நிலைநாட்டப்படுகிறது.
காலம் கடந்துவிட்டாலும் குற்றத்திற்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற விளக்கமும் அளிக்கப்படுகிறது.

பழமொழி சொல்லும் பாடம்: முதியவர் அல்லது இளைஞர் எனக் குற்றவாளியின் வயதினைக் கருத்தில் கொண்டு, சார்பு நிலையுடன் நீதி வழங்கப்படுவது சரியல்ல. குற்றம் செய்தவர் யார் என அவர் பின்புலம் கண்டு மயங்காது, நடுவுநிலை தவறாது நீதி வாங்க வேண்டுமென்பதை வள்ளுவர்,

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்: 541)

நிகழ்ந்த குற்றத்தினை ஆராய்ந்து, விருப்பு வெறுப்பின்றி, சார்புநிலையைத் தவிர்த்து, நடுவுநிலைமை கொண்டு வழங்கப்படுவதே நேர்மையான தீர்ப்பாகும் என்கிறார். எனவே,

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 118)

என்ற குறள் விளக்குவது போல எப்பக்கமும் சாயாமல், நடுவுநிலை தவறாது, துலாக்கோல் போல சீர்தூக்கிப் பார்த்து நியாயம் வழங்குவதே நேர்மையான சான்றோருக்கு அழகு.

நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=64368

94 - நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவரால்

பழமொழி: யாரானும் சொற் சோராதாரோ இலர் 


நற்பால கற்றாரு நாடாது சொல்லுவ
ரிற்பால ரல்லா ரியல்பின்மை நோவதென்?
கற்பா லிலங்கருவி நாடமற் றியாரானுஞ்
சொற்சோர் விலாதாரோ வில். 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 


பதம் பிரித்து:
நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்;
இற்பாலர் அல்லார் இயல்பு இன்மை நோவது என்?
கற்பால் இலங்கு அருவி நாட!-மற்று யாரானும்
சொல் சோர்விலாதாரோ இல்.

பொருள் விளக்கம்:
நல்ல குடியில் பிறந்த கற்றறிந்தவரும் (சில நேரங்களில்) ஆராயாமல் தவறானவற்றைச் சொல்வதுண்டு; (அவ்வாறிருக்க) நற்குடியில் பிறவாதவர் அவரது இயல்பாக இன்னாதவை கூறுவதை எண்ணி வருந்துவதில் என்ன பயன்? மலைப்பாறைகளின் இடையே வீழும் அருவி உள்ள நாட்டைச் சேர்ந்தவரே! யாராக இருப்பினும் சொல் குற்றம் செய்யாதவர் இல்லை.

பழமொழி சொல்லும் பாடம்: நற்குடியில் பிறந்த, நற்பண்புகள் கொண்ட கற்றறிந்த சான்றோரும் கூடச் சிலநேரங்களில் கூறத் தகாத தவறான சொற்களை சிந்தித்துப் பார்க்காமல் சொல்லிவிடுவதுண்டு. இக்கருத்தை வள்ளுவர்,

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. (குறள்: 503)

அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த, குற்றமற்ற ஆன்றோரை ஆராய்ந்து பார்த்தால், அவர்களிடமும் அறியாமை என்ற குற்றம் இருப்பது தெரியவரும் என்கிறார்.

நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=63362

99 - அடங்கி அகப்பட ஐந்தினையும் காத்து

பழமொழி: கொல்லிமேல் கொட்டு வைத்தார்


அடங்கி யகப்பட வைந்தினைக் காத்துத்
துடங்கிய மூன்றினான் மாண்டீண் – டுடம்பொழியச்
செல்லும்வாய்க் கேமஞ் சிறுகாலைச் செய்யாரே
கொல்லிமேற் கொட்டுவைத் தார்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
அடங்கி, அகப்பட ஐந்தினையும் காத்து,
தொடங்கிய மூன்றினான் மாண்டு, ஈண்டு உடம்பு ஒழிய,
செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலைச் செய்யாரே
கொல்லிமேல் கொட்டுவைத் தார்.

பொருள் விளக்கம்:
அடக்கம் என்னும் பண்பினைக் கடைப்பிடித்து, தனது கட்டுக்குள் அகப்படுமாறு ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் ஒழுக்கத்துடன் வாழத் துவங்கி மாண்புடன் வாழ்ந்து, இவ்வுலக வாழ்வில் கொண்டுள்ள உடல் அழிந்து மறுமைக்குச் செல்லும் வழிக்குப் பயன் தரும் நன்னெறியைத் தக்க காலத்தில் செய்து வாழாதவர், உயிர் எடுக்கும் நச்சு உணவை நாடுவதற்கு ஒப்பாகும் செயலைச் செய்யும் அறிவிலியாவார்.

ஒப்பிட்ட நான்கு* பழமொழி நானூறு உரையாசிரியர்களும் வெவ்வேறு வழியில் பொருள் சொல்லும் பாடலாகவும், பாடபேதங்கள் உள்ள பாடலாகவும் விளங்குவது இந்தப் பழமொழி நானூறு பாடல். ‘செய்யாரே’ என்பது ‘செய்தாரே’ எனவும். ‘கொல்லி’ என்பது ‘கொள்ளி’ எனவும், ‘கொட்டு வைத்தார்’ என்பது ‘கோட்டு வைத்தார்’ எனவும் பேதங்கள் காணப்படுகின்றன. அத்துடன் கொல்லி என்று (உயிரை) அழிக்கும் செயலாகவும், கொல்லி என்பது கொல்லி மலையாகவும், கொள்ளி என்று நெருப்பாகவும் உரையாசிரியர்களால் பொருள் கொள்ளப்படுகிறது. கொட்டு என்று களைக்கொட்டு போல நிலத்தை அகழப் பயன்படும் கருவியாகவும், கோட்டு என்பது நெற்கூடையாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. கொண்ட பொருளிற்கேற்ப கொல்லி மலையின் மேல் நெல்லை குமித்து பிற்காலத் தேவைக்கு சேர்த்து வைக்காதவர் எனவும், நெருப்பின் மீது விதை நெல்லைச் சமைத்து உண்ணும் செயலைச் செய்பவர் எனவும், உயிர் கொல்லும் கிழங்கை கொட்டுக் கருவியால் அகழ்ந்து உண்ண முற்படுபவர் எனவும் பலவாறாகப் பொருள் கொள்ளப்படுகிறது. அவ்வாறே துறவற நெறியைக் கடைப்பிடித்தல், சனாதன நெறிப்படி வாழ்தல், மூன்று தீய குணங்களான செருக்கு, சினம், வஞ்சம் என்றவற்றைக் கட்டுப்படுத்துதல் என்று பாடலுக்குப் பலவகையில் உரையாசிரியர்கள் தங்கள் கருத்தினை ஏற்றிப் பொருள் உரைத்துச் செல்கிறார்கள்.

எனவே, பொதுவாக, பிற்கால நலனைக் கருத்தில் கொண்டு தக்க காலத்தில் அறநெறியைக் கடைப்பிடித்து வாழாத ஒருவரது செயலை, விதை நெல்லைச் சமைத்து உண்டுவிடுபவர் செயல் போன்றோ, அல்லது நச்சுத் தன்மை கொண்ட உணவை உண்ண முயல்பவர் செயல் போன்றோ ஒரு அறிவற்ற, தொலைநோக்கற்ற செயலாக இப்பாடல் குறிக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். இக்குழப்பங்களுக்குக் காரணம் இப்பழமொழி வழக்கொழிந்து போனதால் காலமாற்றத்தில் பொருள் புரியாத நிலை ஏற்பட்டிருக்கக் கூடும்.

பழமொழி சொல்லும் பாடம்: நன்னெறியைக் கடைப்பிடித்து, தக்க அறச்செயல்களைச் செய்யாமல் வாழ்வது அறிவற்ற செயலாகும். மண்ணுலகில் வாழும் முறைப்படி வாழ்க்கையை நடத்துபவர் தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுவார் என இதனைச் சுருக்கமாக,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (குறள்: 50)

என்று கூறும் வள்ளுவர்,

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. (குறள்: 36)

பின்னர் செய்வோம் என்று காலம் தாழ்த்தாது அறவழியைக் கடைப்பிடித்து ஒருவர் வாழ்ந்தால், அவரது மரணத்திற்குப் பின்னரும் அவர் நிலைத்த புகழுடன் வாழ அது உதவியாக அமையும் என்று மேலும் விளக்குகிறார்.



*1. செல்வக்கேசவராய முதலியார் (1917); 2. நாராயண ஐயங்கார் (1918); 3. ம. இராசமாணிக்கனார் (1948); 4. புலியூர்க் கேசிகன் (2010)


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=65811

Monday, September 28, 2015

119 - ஒற்கம் தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர்

பழமொழி: பசி பெரிது ஆயினும் புல் மேயாதாகும் புலி 



ஒற்கந்தாம் உற்ற விடத்தும் உயர்ந்தவர்
நிற்பவே நின்ற நிலையின்மேல் – வற்பத்தால்
தன்மேல் நலியும் பசிபெரி தாயினும்
புன்மேயா தாகும் புலி. 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து:
ஒற்கம் தாம் உற்ற இடத்தும், உயர்ந்தவர்
நிற்பவே, நின்ற நிலையின்மேல்;-வற்பத்தால்
தன்மேல் நலியும் பசி பெரிதுஆயினும்,
புல் மேயாது ஆகும், புலி.

பொருள் விளக்கம்:
வறுமை தனக்கு ஏற்பட்ட பொழுதும், உயர் பண்புள்ள சான்றோர், சற்றும் மாறாது நிற்பார் தாம் கொண்ட நற்பண்பின் நிலையிலேயே. (இப்பண்பானது) பஞ்சகாலத்தில் தனது உடலை நலிவடையச் செய்யும் பசி பெரிதும் வருத்தினாலும் புல்லை உண்ணாத புலியின் பண்பினை ஒத்ததாகும்

பழமொழி சொல்லும் பாடம்: சான்றோர் எத்தகைய நிலையிலும் தனது நற்பண்பை இழக்கமாட்டார். வறுமை நேரினும் அதற்காகத் தனது தரம் தாழ்ந்து போகமாட்டார். “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்று இந்நாளும் வழக்கில் இருக்கும் இந்தப் பழமொழி விளக்குவது போல, தனது வாழ்வே சீரழிந்து போயிருப்பினும், நற்பண்பின் இருப்பிடமானோர் சிறுமை தரும் ஒழுக்கமற்ற செயல்களைச் செய்யவும் முற்படுவதில்லை. இத்தகைய நற்பண்பின் இருப்பிடமானவரின் பண்பை கூற வரும் வள்ளுவர்,

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். (குறள்: 954)

கோடி கோடியாக செல்வத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் நற்பண்பு கொண்ட சான்றோர் சிறுமை தரும் கீழ்த்தரமான செயல்களைச் செய்யார், எத்தகைய சூழலிலும் நற்பண்பைக் கைவிடுவது சான்றோர் இயல்பு அல்ல என்று சுட்டிக் காட்டுகிறார்.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=61992

129 - தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும்

பழமொழி: மாக் காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு



தொன்மையின் மாண்ட துணிவொன்றும் இல்லாதார்
நன்மையின் மாண்ட பொருள்பெறுதல் – இன்னொலிநீர்
கன்மேல் இலங்கு மலைநாட! மாக்காய்த்துத்
தன்மேல் குணில்கொள்ளு மாறு.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார்
நன்மையின் மாண்ட பொருள் பெறுதல்,-இன் ஒலி நீர்
கல் மேல் இலங்கும் மலை நாட!-மாக் காய்த்துத்
தன்மேல் குணில் கொள்ளுமாறு.

பொருள் விளக்கம்:
பழமையான நூல்பல கற்பதால் மேன்மைதரும் துணிவு ஒன்றும் பெறாதவர், நன்மை தரும் வகையில் மாண்பு கொண்ட செல்வம் பெறுவாரெனில்; இனிமையான ஓசையுடன் நீரானது கற்பாறைகள் மேல் பாயும் அருவிகள் கொண்ட மலைநாட்டைச் சேர்ந்தவரே, (அவரது நிலையானது) மாமரம் செழித்து காய்கள் பல கொண்டதால் தன்மேல் கல்லெறி படுவது போன்ற நிலையாக அமைந்துவிடும்.

பழமொழி சொல்லும் பாடம்: கல்வியறிவு பெறாத ஒருவர் முயன்று செல்வம் பல சேர்த்தாலும், அதனைக் காப்பாற்றும் வழி அறியாததால், பிறர் அவரது செல்வதை ஏமாற்றி பறித்துக் கொள்ளும் நிலையில் தள்ளப்படுவார் என்றும் பொருள் கொள்ளலாம். கல்வியறிவற்ற காரணத்தால், தான் பெற்ற செல்வதைத் தேவையுள்ளவர் நன்மை பெரும் வகையில் பயன்படுத்தத் தெரியாத, ஈகையின் மேன்மையை உணராத ஒருவரின் செல்வம், அவருக்கும் பலனின்றி பிறகு தீயார் கொள்ளை கொள்ளும் நிலையை அடையும் என்றும் பொருள் கொள்ளலாம்.

எனவே பொதுவாகக் கொள்வோமானால், அறிவின்மை காரணமாக செல்வதை எவ்வாறு பாதுகாப்பது என்றோ; அல்லது எவ்வாறு தனக்கும் பிறருக்கும் பயனளிக்கும் வகையில் நன்முறையில் செலவழிப்பது என்றோ அறியாத ஒருவரின் செல்வம், அவருக்குப் பலன் தராமல் தீயவர் கைப்பற்றும் நிலையை அடையும். அறிவில்லாதவர் பெற்ற செல்வமானது, காய்த்த மரம் கல்லடி பட்டு துன்பம் பெறுவது போல அவருக்கும் அவரது பொருளுக்கும் துன்பத்தையே விளைவிக்கும், இக்கருத்தைக் குறள்,

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. (குறள்: 408)

அறிவற்றோர் பெற்ற செல்வம், கற்றறிந்த நல்லவர் ஒருவரை வருத்தும் வறுமையை விடவும் பெரிதும் துன்பம் தருவதாகும் என்று கூறுகிறது.

நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=63624

139 - பெரியாரைச் சார்ந்தார் மேல்

பழமொழி: நாவல்கீழ்ப் பெற்ற கனி


கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்
தெற்ற உணரார் பொருள்களை – எற்றேல்
அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை
நாவற்கீழ்ப் பெற்ற கனி.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
கற்றானும், கற்றார் வாய்க் கேட்டானும், இல்லாதார்
தெற்ற உணரார், பொருள்களை; எற்றேல்,
அறிவு இலார் மெய்த் தலைப்பாடு பிறிது இல்லை;
நாவல் கீழ்ப் பெற்ற கனி.

பொருள் விளக்கம்:
(அறிவுபெறும் பொருட்டு தாமே முயன்று) கற்றோ அல்லது கற்றறிந்தவர் சொல்லித்தருவதைக் கேட்கவோ வாய்ப்பு இல்லாதவர், தெளிவாகப் பொருளுணர்ந்து புரிந்து கொண்டிருக்க மாட்டார். நிலை இவ்வாறிருக்க, கல்வி கேள்வி அறிவு இல்லாதவர் ஒருகால் மெய்ப்பொருள் அறிந்து கொண்டார் என்றால் அதை அவரது திறமை என்று கருத வழியில்லை. (தன்முயற்சி சிறிதும் இன்றி) நாவல் மரத்தின் கீழ் விழுந்திருக்கும் பழத்தை எடுத்துக் கொள்ளும் தன்மைக்கு ஒப்பானதாகும் அச்செயல்.

பழமொழி சொல்லும் பாடம்: முறையாகப் பெறப்படாத, தகுந்த அடிப்படையற்ற அறிவாற்றலை உலகத்தார் மதிப்பதில்லை. கல்வி, கேள்வி இன்றியே ஒருவர் கற்றறிந்தார் மட்டுமே அறிந்த பொருளை கூறுவாராகில் அது தனது முயற்சி இன்றி மரத்திலிருந்து விழுந்த பழத்தை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதைப் போன்றது. அத்தகைய செயல் அவரது திறமையை உணர்த்தும் செயலாகாது. இதனை வள்ளுவரும்,

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். (குறள்: 404)

கல்லாதவருடைய அறிவொளி சிறந்ததாக இருந்தாலும், கல்வியறிவு பெற்றவர் அவரை அறிவாளி என்று ஏற்றுக்கொள்வதில்லை என்று கூறுகிறார். மேலும்,

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். (குறள்: 249)

அறிந்து தெளியாதவர் உண்மைப்பொருளைக் கண்டறிந்து கூறுவது போன்ற செயலைப் போன்றதாகவே அருள் இல்லாதவர் செய்யும் அறச்செயலும் இருக்கும் அருளின்றி செய்யும் அறச்செயலுடன் பிறிதொரு குறளில் அத்தகைய அறிவை ஒப்பிட்டும் கூறுகிறார்.


நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=60485

145 - ஒல்லாது ஒன்று இன்றி உடையார்



பழமொழி: கடலுள்ளும் காண்பவே நன்கு 


ஒல்லாத வின்றி உடையார் கருமங்கள் 
நல்லவாய் நாடி நடக்குமாம் – இல்லார்க் 
கிடரா வியலும் இலங்குநீர்ச் சேர்ப்ப! 
கடலுள்ளும் காண்பவே நன்கு. 
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து:
ஒல்லாத இன்றி, உடையார் கருமங்கள்
நல்லவாய் நாடி நடக்குமாம்; இல்லார்க்கு
இடரா இயலும்;-இலங்கு நீர்ச் சேர்ப்ப!
கடலுள்ளும் காண்பவே, நன்கு.

பொருள் விளக்கம்:
இயலாமல் போனது என்று (தடையேதும்) இல்லாமல், செல்வந்தரின் காரியங்கள் நல்ல முறையில் இனிதே நடந்தேறும். பொருள் இல்லாதவருடைய செயல்கள் துன்பமாகவே முடியும். சிறந்த நீர்வளம் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, (பொருள் உள்ளவர்) கடல்தாண்டிச் சென்றாலும் காரியத்தில் நன்கு வெற்றி காண்பார்.

பழமொழி சொல்லும் பாடம்: பொருள் உடையவர் தொடங்கும் காரியங்கள் தடையின்றி நன்கே முடியும். காரியத்தின் வெற்றி தோல்விக்கு பொருளாதார நிலை காரணமாக அமைகிறது. இதனையே வள்ளுவர்,

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. (குறள்: 753)

பொருள் என்ற அணையாவிளக்கைப் பெற்றிருப்பவரால், எந்த தேசத்திற்குச் சென்றாலும் இருள் என்ற துன்பத்தை பொருளால் விரட்டி வெற்றி காண முடியும் என்கிறார்.

நன்றி வல்லமை:http://www.vallamai.com/?p=63408


158 - மறுமை ஒன்று உண்டோ?

பழமொழி: கட்டி அடையைக் களைவித்துக் கண்சொரீஇ இட்டிகை தீற்றுபவர் 


மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு, செய்ம்மினென் பாரே – நறுநெய்யுள்
கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர். 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து:
‘மறுமை ஒன்று உண்டோ? மனப் பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மின்’ என்பாரே-நறு நெய்யுள்
கட்டி அடையைக் களைவித்து, கண் சொரீஇ,
இட்டிகை தீற்றுபவர்.

பொருள் விளக்கம்:
மறுபிறவி என்ற ஒன்று உண்டா? (அதனால் பாவம், புண்ணியம் போன்ற கவலைகளற்று) மனம் விரும்பியதை எல்லாம் அடையும் வகையில் வாழுங்கள் என்று அறிவுரை கூறுபவர்; நறுமணம் கொண்ட நெய்யில் செய்வித்து, சுவைப்பாகில் ஊறிய அடையைக் கொடுக்காது, கண்மூடித்தனமாகச் செங்கல்லை உண்ணக் கொடுப்பவரை ஒத்தவர்.

பழமொழி சொல்லும் பாடம்: அறிவற்றவர் நன்னெறி புகட்டாது, தீமை தரும் வழியில் வாழும் வகை காட்டுவார். இந்தப்பிறவியில் நாம் ஆற்றும் செயல்கள்தாம் நமது மறுபிறவியில் நாம் வாழும் நிலையை நிர்ணயிக்கும் என்பது மக்களை நல்வழியில் செலுத்துவதற்கான நம்பிக்கை அடிப்படையிலமைந்த ஓர் முயற்சியாகும். ஆதலால், அதனை எடுத்துரைத்து நல்வழி நடப்பீராக என்று வழிகாட்டாது, மனம்போனபடி வாழ அறிவுரை கூறுபவர் சுவை உணவைப் பரிமாறாது, செங்கல்லை ஊட்டுபவர் என்பது இப்பழமொழி பாடல் தரும் விளக்கம். குறள் என்ன நெறி காட்டுகிறது எனப் பார்ப்போமானால்,

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. (குறள்: 422)

மனம் போனபடியெல்லாம் நடக்காமல், தீமைகளில் இருந்து விலகி நல்வழி நடப்பதே அறிவுடையார் செயல் என்று கூறுகிறது. ஆகவே, தீமை விளக்கி நன்னெறி வழி நடப்பது நம் கடமை.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=62466

Wednesday, September 23, 2015

169 - கரப்புடையார் வைத்த கடையும்

பழமொழி: சுரத்திடைப் பெய்த பெயல்


கரப்புடையார் வைத்தகடையும் உதவா
துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால்
நிரப்பிடும்பை மிக்கார்க் குதவஒன் றீதல்
சுரத்திடைப் பெய்த பெயல்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
கரப்பு உடையார் வைத்த, கடையும் உதவா,
துரப்புடைய மன்னர்க்கே துப்புரவு; அது அல்லால்,
நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல்-
சுரத்திடைத் பெய்த பெயல்.

பொருள் விளக்கம்:
(வறுமையில் வாடுவோருக்குக் கொடுத்து உதவாது) ஒளித்து வைப்பவரின் செல்வம் இறுதியில் அவர் சந்ததிக்கும் உதவாது போகும். (பின்னர் புதையலாக அது கண்டெடுக்கப்பட்டு) பகைவரைத் துரத்தி விரட்டும் தொழிலைச் செய்யும் அரசுக்கு உரிமை உடையதாக உலக வழக்குப்படி சென்று சேரும். அவ்வாறின்றி, வறுமையில் துன்பம் மிகக் கொண்டவருக்கு உதவுமாறு அப்பொருள் மூலம்  ஒரு உதவி செய்வது வறண்டப் பாலை நிலத்திற்குப் புத்துயிர் ஊட்டும் மழைக்கு ஒப்பாகப் பயன் அளிக்கும்.

பழமொழி சொல்லும் பாடம்: செல்வத்தை மறைத்து வைக்காமல், வாடும் வறியவர்க்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் கொடுத்து உதவுவதே சிறந்த ஈகையாகும். தேடிச் சேர்த்த பொருளைத் தக்கவருக்கு உதவப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தைத் திருக்குறள்,

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள்: 212)

ஒருவர் முயன்று சேர்க்கும் செல்வத்தைத் தக்கவருக்கு பயன்படுமாறு கொடுத்துதவ வேண்டும் என்று விளக்குகிறது.


நன்றி வல்லமை:http://www.vallamai.com/?p=65695


174 - யாம் தீய செய்த மலை மறைத்தது

பழமொழி: கணையிலும் கூரியவாம் கண் 


யாந்தீய செய்த மலைமறைத்த தென்றெண்ணித்
தாந்தீயார் தந்தீமை தேற்றாரால் – ஆம்பல்
மணவில் கமழும் மலிதிரைச் சேர்ப்ப!
கணையிலுங் கூரியவாம் கண். 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து:
‘யாம் தீய செய்த மலை மறைத்தது’ என்று எண்ணி,
தாம் தீயார் தம் தீமை தேற்றாரால்;-ஆம்பல்
மண இல் கமழும் மலி திரைச் சேர்ப்ப!-
கணையிலும் கூரியவாம் கண்.

பொருள் விளக்கம்:
நாம் தீமைகள் செய்ததை மலை மறைத்தது விட்டது (போன்று அவை மறைவில் உள்ளது) என்று நினைக்கும் தீயவர், தங்கள் தீச்செயல் விளைவு பற்றிய தெளிவற்றவர். ஆம்பல் மலர்கள் மணவிழா இல்லங்களில் மணம் பரப்பிட, மிகுத்த அலைகளையுடைய நீர்வளம் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, அம்பையும் விடக் கூர்மையானவை கண்கள் (அவை குற்றத்தைக் கண்டுவிடும் என அறிக).

பழமொழி சொல்லும் பாடம்: பிறர் மனதில் ஓடும் எண்ணங்களை அவரது முகத்தைக் கொண்டே கூரிய பார்வை கொண்டவர் உணர்ந்து விடுவார். குற்றங்களை அத்தகையவரிடம் இருந்து மறைக்க இயலாது. இக்கருத்தை வள்ளுவர்,

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. (குறள்: 710)

நுட்பமான அறிவுடையோர் எனப்படுபவர், பிறர் மனக்கருத்தை அளக்கப் பயன்படும் கருவி அவரது கண்களைப் போன்றல்லாது வேறொன்று இல்லை என்கிறார். மேலும்,

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண். (குறள்: 705)

ஒருவரது அகத்தில் உள்ளதை அவரது முகமே காட்டிக் கொடுத்துவிடும் என்கின்றபோது, அந்த முகக்குறிப்பை உணர்ந்து கொள்ள இயலாத கண்கள் இருந்தென்ன பயன் என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=62889

180 - வெள்ள மாண்பு எல்லாம் உடைய

பழமொழி: பறைக்கண் கடிப்பிடு மாறு 


வெள்ளமாண் பெல்லாம் உடைய தமரிருப்ப,
உள்ளமாண் பில்லா ஒருவரைத் – தெள்ளி
மறைக்கண் பிரித்தவரை மாற்றா தொழிதல்,
பறைக்கண் கடிப்பிடு மாறு. 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து:
வெள்ள மாண்பு எல்லாம் உடைய தமர் இருப்ப,
உள்ளம் மாண்பு இல்லா ஒருவரைத் தெள்ளி,
மறைக்கண் பிரித்து, அவரை மாற்றாது ஒழிதல்-
பறைக்கண் கடிப்பு இடுமாறு.

பொருள் விளக்கம்:
(அளவிட இயலாத, மிகுந்த) வெள்ளம் போன்ற நற்பண்புகள் யாவும் கொண்ட உறவினர்கள் இருந்திட, உள்ளத்தில் நற்பண்பு இல்லாத ஒருவரும் உடனிருந்தால், தெளிவாக ஆராய்ந்து, மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைப் பேசும்பொழுது பிரித்து, அவரை வெளியேற்றத் தவறினால், அது (தமுக்கு அடிப்பது போல) பறையின் மேல் சிறுதடி கொண்டு அடிப்பதாகும் (தகவலை அக்கயவர் பரப்பிவிடுவார்).

பழமொழி சொல்லும் பாடம்: மறைக்கப்படவேண்டியவற்றைப் பேசும்பொழுது, இரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாத குணமுள்ளவரை விலக்காவிட்டால், தமுக்கடிபடிப்பது போல அவரே இரகசியத்தைப் பரப்பிவிடுவார். இதனைக் குறள்,

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். (குறள்: 1076)

தாம் அறிந்த இரகசியங்களை வலியச் சென்று பிறருக்குப் பரப்பிவிடும் கயவரை, செய்தி அறிவிக்க அடிக்கப்படும் பறைக்கு ஒப்பானவர் என்று கூறுகிறது.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=63253

181 - வெற்றி வேல் வேந்தன் வியங்கொண்டால்

பழமொழி: செய்கொன்றான் உண்கென்னு மாறு



வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால் யாமொன்றும்
பெற்றிலே மென்பது பேதைமையே - மற்றதனை
எவ்வ மிலராகிச் செய்க அதுவன்றோ
செய்கென்றான் உண்கென்னு மாறு.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
வெற்றி வேல் வேந்தன் வியம் கொண்டால், ‘யாம் ஒன்றும்
பெற்றிலேம்’ என்பது பேதைமையே; மற்று அதனை
எவ்வம்  இலர் ஆகிச் செய்க!-அது அன்றோ,
‘செய்க!’ என்றான், ‘உண்க!’ என்னுமாறு.

பொருள் விளக்கம்:
வெற்றியைத் தரும் வேலினை ஏந்திய மன்னவன் ஆணை இட்டால், நான் அதனைச் செயல் படுத்தும் திறனைப் பெற்றிருக்கவில்லை என்று சொல்லி மறுப்பது அறியாமையாகும். அவ்வாறின்றி அச்செயலை வருத்தமுறாமல் செய்க. அவ்வாறாகச் செய்தால், செய்க இச்செயலை என்ற மன்னவனின் கட்டளை உணவு உண்பதற்கு வழிவகுத்ததை ஒத்ததாகும்.

பழமொழி சொல்லும் பாடம்: தனக்குத் திறமையில்லை என்று வருத்தம் கொள்ளது, அதிகாரத்தில் உள்ளவர் இட்ட கட்டளையை மறுக்காது நிறைவேற்றுவது, பசியின்றி வாழும் வகையில் ஒருவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும். நம்மால் இது இயலாது என்று மனந்தளராது காரியமாற்றுவதால் விளையும் நன்மையைக் குறிக்கும் குறள்,

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். (குறள்: 611)

நமக்குக் கடினமான செயல் இது என்று மனச்சோர்வு கொள்ளாது, முயன்று செயலாற்றினால், அதன் விளைவு பெருமை தரத் தக்க வகையில் அமையும் என்று விளக்குகிறது.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=64773

186 - கற்றது ஒன்று இன்றிவிடினும் கருமத்தை


பழமொழி: இளையோனே யாயினும் மூத்தானே யாடுமகன் 


கற்றதொன் றின்றி விடினும் கருமத்தை
அற்ற முடிப்பான் அறிவுடையான்: – உற்றியம்பும்
நீத்தநீர்ச் சேர்ப்ப! இளையானே யாயினும்
மூத்தானே யாடு மகன். 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து:
கற்றது ஒன்று இன்றிவிடினும், கருமத்தை
அற்றம் முடிப்பான் அறிவுடையான்; உற்று இயம்பும்;-
நீத்த நீர்ச் சேர்ப்ப!-இளையானே ஆயினும்,
மூத்தானே, ஆடு மகன்.

பொருள் விளக்கம்:
முறையான கல்வியறிவைப் பெற்றிராவிட்டாலும், செய்ய வேண்டிய செயலைச் சோம்பலின்றி செய்து முடிப்பவர்தான் அறிவுடையவர் ஆவார். நிறைந்து ஆர்ப்பரிக்கும் வெள்ளப் பெருக்கெடுத்த நீர்நிலைகளைக் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, இளவயதினராக இருப்பினும் முதிர்ச்சி அடைந்தவராகவே கருதப்படுவார் சிறப்பாகச் செயலாற்றுபவர்.

பழமொழி சொல்லும் பாடம்:   கல்வியறிவு இல்லாதிருப்பினும் திறம்படச் செயலாற்றுபவரே அறிவுடையவர் எனக் கருதப்படுவார். ஏற்றுக் கொண்ட செயலை முடிக்கும் பொருட்டு இடைவிடாது நல்ல முயற்சி செய்யும் ஆள்வினை உடையவரே அறிவுடையவர் என்பதை வள்ளுவர்,

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. (குறள்: 618)

செய்யவேண்டிய சூழ்நிலையோ வாய்ப்போ இல்லாதிருப்பது ஒரு குறையல்ல, ஆனால் அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாமையே ஒருவருக்குப் பெரும்பழியைத் தரும் என்கிறார்.



நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=62961

196 - புரை இன்றி நட்டார்க்கு நட்டார்த்த

பழமொழி: ஒன்றேற்றி வெண்படைக்கோள் ஒன்று 



புரையின்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
உரையும் பொருண்முடிவும் ஒன்றால் – உரைபிறிது
கொண்டெடுத்துக் கூறல், கொடுங்கழித் தண்சேர்ப்ப!
ஒன்றேற்றி வெண்படைக்கோ ளொன்று. 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து:
புரை இன்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
உரையும் பொருள் முடிவும் ஒன்றால்; உரை பிறிது
கொண்டு எடுத்துக் கூறல், கொடுங் கழித் தண் சேர்ப்ப!
ஒன்று ஏற்றி வெண்படைக்கோள் ஒன்று.

பொருள் விளக்கம்:
கள்ளமற்ற நட்பு கொண்டவர்களுக்குள், நண்பர் கூறிய சொற்களும் அதன் பொருளும் ஒன்றாகவே இருக்கும். மனதில் ஒன்றும் பேச்சில் மற்றொன்றும் கூறும் வஞ்சனையுள்ளோர் சொல்வது, வளைந்த உப்பங்கழிகள் கொண்ட குளிர்ந்த கடல் நாட்டில் வாழ்பவரே, மற்றொருவர் பாடலை தனது வெண்பா எனச் சொல்லி ஏய்க்கும் செயலுக்கு ஒப்பாகும்.

பழமொழி சொல்லும் பாடம்:  உண்மையான நட்பு கொண்டவர் என்றும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதில்லை. அவ்வாறின்றி, மனம் வேறு, சொல்வேறாகப் பேசும் வஞ்சம் நிறைந்தவர் நட்பைத் தவிர்த்துவிடுதல் வேண்டும் என்ற அறிவுரையை வள்ளுவர்,

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு. (குறள்: 819)

சொல்லும் செயலும் மாறுபட்டவரின் நட்பு கனவிலும் துன்பத்தைத் தரும் எனக் கூறி எச்சரிக்கிறார்.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=62695

203 - சுட்டிச் சொலப்படும் பேர் அறிவினார்

பழமொழி: அறிவினை ஊழே அடும் 


சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்
பட்ட விருத்தம் பலவானால், – பட்ட
பொறியின் வகைய கருமம் அதனால்
அறிவினை ஊழே அடும். 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து:
சுட்டிச் சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும்,
பட்ட விருத்தம் பலவானால், பட்ட
பொறியின் வகைய கருமம், அதனால்,-
அறிவினை ஊழே அடும்.

பொருள் விளக்கம்:
குறிப்பிட்டுச் சொல்லப்படும் பெரிய அறிஞர்கள் இடத்திலும் உள்ள குற்றங்கள் பலவாக இருக்குமானால், (அது அவர்களது) முன்வினைப்பயன் செய்த செயலாகும். ஆகையினால் அறிவினை விதி அழித்து பேதைமையாக்கும்.

பழமொழி சொல்லும் பாடம்:  பேரறிவு கொண்டோரும் விதியின் காரணத்தால் மதியிழந்து குற்றம் செய்வார்கள். 'விநாச காலே விபரீத புத்தி' என்பது வடமொழி கூறும் வழக்கு. ஒருவர் கெடும் நேரம், காலம் வந்தால் மதிகெட்டு குற்றமிழைத்து அழிந்து போவார்கள். பிறர் போற்றும் அறிஞர்களும் தவறு செய்வதற்கு அவர்களது தலையெழுத்தே காரணம், விதியின் வழி அவர்களது மதி சென்றது என்பதைத் திருக்குறள்,

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. (குறள்: 372)

ஒருவர் சிறுமைப்பட வேண்டிய விதியிருந்தால் அவர்கள் அறிவழிந்து போவார்கள், அதுவே அவர்கள் சிறப்படைய வேண்டிய நேரமாக இருக்குமானால் அறிவாற்றலால் உயர்வடைவர் என்று விளக்குகிறது.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=64341

213 - சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்து ஒழுக



பழமொழி: எல்லாம் பொய் அட்டூணே வாய்


சேர்ந்தா ரொருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர்
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும் – தேர்ந்தவர்க்குச்
செல்லாமை காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்
எல்லாம்பொய் அட்டூணே வாய்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்து ஒழுகப்பட்டவர்
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும், தேர்ந்து அவர்க்குச்
செல்லாமை காணாக்கால், செல்லும்வாய் என் உண்டாம்?
எல்லாம் பொய்; அட்டு ஊணே வாய்.

பொருள் விளக்கம்:
தன் சுற்றத்தார் ஒருவரை; உதவிநாடி தன்னிடம் வந்தவரை விருந்தோம்பும் ஒருவர், வந்தவர் தன்னுடன் தொடர்பில் இருப்பவரல்ல என்று தெளிவாகத் தெரிந்தாலும், அந்த உறவினர் வறுமையில் இருந்து மீள முடியாதிருப்பதை ஆராய்ந்து அதை நீக்கும் முறையை அறிந்திராவிடில், அவருக்கு வேறு என்னதான் வழி இருக்கிறது? (பசி நீக்கும் உணவளித்துக் காப்பதைத் தவிர பிற உதவிகள்) எல்லாமே பொய்; சமைத்து உணவளித்து உதவுவதே மெய்யான உதவி.

பழமொழி சொல்லும் பாடம்: அறங்களுள் சிறந்த அறமாகக் கருதப்படுவது வறியவரின் பசி நீங்க உணவளிப்பது மட்டுமே. பசி தீர்க்கும் அறத்தின் சிறப்பை வள்ளுவர்,

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள்: 226)

வறுமையில் உழல்பவரின் பசியைத் தீர்த்திடுக. அந்த அறம் ஒன்றே பொருள் பெற்றோர் தனது செல்வத்தை தம் பிற்கால நலனுக்காகச் சேமித்து வைக்கும் கருவூலம் என்கிறார்.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=65428

216 - அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்

பழமொழி: கடங்கொண்டும் செய்வார் கடன் 


அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்
இடங்கண் டறிவாமென் றெண்ணி யிராஅர்
மடங்கொண்ட சாயல் மயிலன்னாய்! சான்றோர்
கடங்கொண்டும் செய்வார் கடன். 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து:
அடர்ந்து வறியராய், ஆற்றாத போழ்தும்,
‘இடம் கண்டு அறிவாம்’ என்று எண்ணி இராஅர்;-
மடம் கொண்ட சாயல் மயில் அன்னாய்!-சான்றோர்
கடம் கொண்டும் செய்வர் கடன்.

பொருள் விளக்கம்:
மிகுந்த வறுமை சூழ்ந்தவராய், (தேவையுள்ளோருக்கு) உதவ இயலாத நிலையிலும், நமக்கு வசதி வந்தால் உதவுவோம் என்று பண்புடையோர் எண்ணுவதில்லை. பெண்மைக்குரிய மடமைப் பண்பையும், மயிலின் சாயலையும் கொண்ட அழகியே, சான்றோர்கள் கடன்பட்டாவது உதவி செய்து தங்களது கடமையை நிறைவேற்றுவார்கள்.

பழமொழி சொல்லும் பாடம்:   உதவும் பண்புடைய சான்றோர், பிறரிடம் கடன்பட்டாவது தேவையுள்ளவருக்கு உதவும் பண்புள்ளவர்களாகவே இருப்பர். சான்றோருடைய இப்பண்பினைக் குறிக்குமிடத்து வள்ளுவர்,

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர். (குறள்: 218)

பண்பிற் சிறந்த சான்றோர் தம்மிடம் கொடுக்க ஒன்றும் இல்லாது வறுமை சூழ்ந்துவிட்ட காலத்திலும்கூட, வறியவர் தேவையறிந்து அவர்களுக்கு உதவிடும் கடமை நிறைந்தவர்களாகவே விளங்குவர் என்கிறார்.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=62224 

Tuesday, September 22, 2015

226 - செயிர்அறு செங்கோல் சின வேந்தன்

பழமொழி: செய்தானை ஒவ்வாத பாவையோ இல்


செயிரறு செங்கோல் சினவேந்தன் தீமை
பயிரறு பக்கத்தார் கொள்வர் - துகிர்புரையும்
செவ்வாய் முறுவனற் சின்மொழியாய்! செய்தானை
ஒவ்வாத பாவையோ வில்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
செயிர் அறு செங்கோல் சின வேந்தன் தீமை
பயிர் அறு பக்கத்தார் கொள்வர்;-துகிர் புரையும்
செவ்வாய் முறுவல் நல் சில் மொழியாய்!-செய்தானை
ஒவ்வாத பாவையோ இல்.

பொருள் விளக்கம்:
குற்றமற்ற செங்கோலை ஏந்திய, சினம் கொண்ட மன்னவன் இழைக்கும் தீமைக்கு, குற்றமற்ற, அருகில் உள்ள அமைச்சர்களே பொறுப்பாவார்கள். பவளம் போன்ற செவ்விதழ் கொண்ட வாயில் புன்முறுவல் துலங்க இனிய சில மொழிகளைக் கூறும் பெண்ணே, (இது எவ்வாறெனில்) ஓவியர் தம் மனது விரும்பாத ஓவியத்தை வரைவதில்லை அன்றோ.

பழமொழி சொல்லும் பாடம்:  ஓவியர் விரும்பியது போலவே அவர் தனது ஓவியப்பாவையை வரைவார், அது போல அமைச்சர் வழி நடத்துவதற்கு ஏற்பவே அரசனின் செயல்கள் அமையும். எனவே, அரசன் செய்யும் தீங்குகளுக்கு அருகிருந்து அவனை இடித்துரைத்துத் திருத்த வேண்டிய அமைச்சர்களே பொறுப்பாவார். அறிவுரை கூறவேண்டியவர் கடமையைப் பற்றிக் கூறும் வள்ளுவர்,

அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன். (குறள்: 638)

அறிஞர் சொல்லும் அறிவுரையையும் கேட்காத, சொந்த அறிவும் இல்லாத மன்னவனுக்கு, உடனிருக்கும் அமைச்சரே நல்வழி காட்டி அறிவுறுத்தக் கடமைப் பட்டவர் என்று கூறுகிறார்.


நன்றி வல்லமை:   http://www.vallamai.com/?p=64730


232 - தமரேயும் தம்மைப் புகழ்ந்துக்கும்

பழமொழி: அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்



தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
அமரா ததனை அகற்றலே வேண்டும்
அமையாரும் வெற்ப! அணியாரே தம்மைத்
தமவேனும் கொள்ளாக் கலம்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
தமரேயும், தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தில்,
அமராததனை அகற்றலே வேண்டும்;
அமை ஆரும் வெற்ப! அணியாரே தம்மை,
தமவேனும், கொள்ளாக் கலம்.

பொருள் விளக்கம்:
தனது சுற்றத்தாராகவே இருப்பினும், தன்னைப் புகழ்ந்து பேசும் பொழுதில், அவை பொருத்தமற்ற புகழுரைகளாக இருக்கும் பொழுது தடுத்துவிடல் வேண்டும். மூங்கில் செறிந்திருக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவரே, ஒருவரும் அணிய விரும்புவதில்லை,  அவை தன்னுடையதாகவே இருப்பினும் பொருந்தாத அணிகலன்களை.

பழமொழி சொல்லும் பாடம்: தனக்குப் பொருத்தமற்ற புகழுரைகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது. இதனை,

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. (குறள்: 439)

எந்தக் காலத்திலும் தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு நன்மை தராத செயல்களை விரும்பக்கூடாது என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=61804



233 - ஆமாலோ என்று பெரியாரை முன் நின்று

பழமொழி: போமாறறியா புலன்மயங்கி ஊர்புக்குச் சாமாகண் காணாதவாறு



ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று
தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல்
போமா றறியா புலன்மயங்கி ஊர்புக்குச்
சாமாகண் காணாத வாறு.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
ஆமாலோ என்று பெரியாரை முன் நின்று
தாமாச் சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல்,
போம் ஆறு அறியா, புலன் மயங்கி, ஊர் புக்கு,
சாம் மா கண் காணாதவாறு.

பொருள் விளக்கம்:
ஆகுமா இந்தப் பெரியோர்களால் என்று பெரியோர் முன்னிலையில் (இறுமாந்து) நின்று, தாமாகவே சிறுபுத்தி உள்ளவர் (பெரியோரிடம்) இருந்து மாறுபட்டுச் செயல்படுவது, செல்லும் வழி பற்றிய புரிதல் சிறிதும் இன்றி, தனது மதியை இழந்தவர் போல அவர் செயல்படும் நிலையானது, ஊரினுள் புகுந்து அடிபட்டுச் சாகும் வனவிலங்கின் கண்ணிழந்த செய்கையை ஒத்தது.

பழமொழி சொல்லும் பாடம்:   ஆன்றோர் தமது பட்டறிவால் அறிந்து கூறும் நன்மை தரும் அறிவுரையை இகழ்வாக எண்ணிப் புறக்கணித்து, பெரியோர்களது அறிவுரைக்கு மாறாக நடப்பவர் தமது அழிவைத் தாமே தேடிக் கொள்பவர். பெரியோர் அறிவுரையை மதிக்காது அழிவைத் தேடிக் கொள்பவருக்கு அறிவுரை கூற விரும்பிய வள்ளுவர்,

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். (குறள்: 892)

பெரியோரை மதிக்காமல் நடந்து கொள்பவர் நீங்காத துன்பத்தையே எதிர்கொள்ள நேரிடும் என்று கூறுகிறார். இதையும் விட ஒருபடி மேலே சென்று,

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (குறள்: 896)

தீயால் சுடப்பட்டால் கூட பிழைத்துக் கொள்ள இயலும், ஆனால் பெரியோரை அவமதித்து, அவரை எதிர்த்துக் குற்றம் செய்பவர் உயிர்வாழ்தல் இயலாது என்றும் எச்சரிக்கிறார்.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=61743


239 - உற்றால் இறைவற்கு உடம்பு கொடு

பழமொழி: உண்ணா இரண்டேறு ஒருதுறையுள் நீர் 


உற்றா லிறைவற் குடம்பு கொடுக்கிற்பான்
மற்றவற் கொன்னாரோ டொன்றுமோ? – தெற்ற
முரண்கொண்டு மாறாய உண்ணுமோ? உண்ணா
இரண்டே றொருதுறையுள் நீர். 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து: 
உற்றால், இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான், 
மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ?-தெற்ற 
முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ? உண்ணா, 
இரண்டு ஏறு ஒரு துறையில் நீர். 

பொருள் விளக்கம்: 
ஒரு துன்பம் தனது தலைவருக்கு நேரிடுமானால் தனது உடலையே கொடுக்கும் வீரர் ஒருவர், மாற்றானாகிய எதிரியுடன் சென்று சேர்வாரா? (அவ்வாறு செய்ய விரும்ப மாட்டார்). தெளிவாக தம்முள் முரண்பாடுகள் கொண்ட வலிமையுள்ளவர்கள் ஒன்றுபடுவாரோ? மாறுபாடுகள் கொண்ட எருதுகள் இரண்டு இணைந்து ஒரே துறையில் நீர் உண்ணுவதில்லையே (அவ்வாறே, தனது மன்னனிடம் மாறாத அன்பு கொண்ட வீரரும் பகைவனுடன் சேர விரும்ப மாட்டார்). 

பழமொழி சொல்லும் பாடம்: அரசைக் காக்கும் பொறுப்புள்ள வீரர் பகைவருடன் சென்று சேர்ந்து தனது நாட்டிற்கு இரண்டகம் செய்ய விரும்ப மாட்டார். வீரரின் இத்தகைய பண்பினை, இத்தகைய வீரர்கள் கொண்ட படையினை விவரிக்கும் வள்ளுவர், 

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த 
வன்க ணதுவே படை. (குறள்: 764) 

போரில் அழிவின்றியும், பகைவரின் வஞ்சத்திற்கு இறையாகாமலும்(அறைபோகாதாகி), தலைமுறை தலைமுறையாக அச்சம் தவிர்த்து வீரத்துடன் போரிடும் படையையே சிறந்த படை என்கிறார். 


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=65218



266 - வினைப் பயன் ஒன்று இன்றி

பழமொழி: தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு 



வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு
நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்
புனப்பொன் அவிர்சுணங்கிற் பூங்கொம்ப ரன்னாய்
தனக்கின்னா இன்னா பிறர்க்கு. 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து:
வினைப் பயன் ஒன்று இன்றி, வேற்றுமை கொண்டு,
நினைத்துப் பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும்;
புனப் பொன் அவிர் சுணங்கின் பூங் கொம்பர் அன்னாய்!
தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு.

பொருள் விளக்கம்:
செய்யும் செயலால் ஒரு பயனும் இல்லாத பொழுது, பகைமை பாராட்டி, (துன்பத்தைக் கொடுக்கும் செயல்களை) திட்டமிட்டு, பிறருக்குத் துயர் தரும் செயல்களை செய்யாதிருத்தல் வேண்டும். புலங்களில் மலர்ந்துள்ள பூக்களில் காணும் பொன்னையொத்த மகரந்தத் துகள்கள் போன்ற தேமலையுடைய பூங்கொம்பு போன்றவளே, தனக்குத் துன்பம் தருவனவையே, பிறருக்கும் துன்பம் தரும் (என அறிவாயாக).

பழமொழி சொல்லும் பாடம்:   தனக்குத் துன்பம் தருவதே பிறருக்கும் துன்பம்தரும் ஆதலால், பிறரைத் துன்புறுத்தாதிருக்க வேண்டும். காழ்ப்புணர்வு கொண்டு துன்பம்தரும் வழிகளைத் தேடித்தேடி பிறருக்குத் துன்பம் தருதல் பயனற்ற செயல், தனக்குத் துயர் தரும் செயல்களே பிறருக்கும் துயர் தரும் என்பதை உணரவேண்டும் என்பதைக் கூறும் ,

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல். (குறள்: 318)

தனக்கு இவையிவை துன்பம் தரும் என நன்கறிந்தவர், பிறருக்கு அச்செயல்களை ஏன் செய்யவேண்டும் என்ற திருக்குறள் கருத்தினை இங்கே ஒப்பு நோக்கலாம்.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=61408

Monday, September 21, 2015

271 - அறிவினால் மாட்சி ஒன்று இல்லா

பழமொழி: அணியெல்லாம் ஆடையின் பின்



அறிவினால் மாட்சியொன் றில்லா ஒருவன்
பிறிதினால் மாண்ட தெவனாம்? – பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
அணியெல்லாம் ஆடையின் பின்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம்?-பொறியின்
மணி பொன்னும், சாந்தமும், மாலையும், இன்ன
அணி எல்லாம், ஆடையின் பின்.

பொருள் விளக்கம்:
அறிவுடையவர் என்ற பெருமையைப் பெற்றிராத ஒருவருக்கு, பிற செல்வங்களைப் பெற்றிருப்பினும் அவை என்ன பெருமையைத் தந்துவிடும்? (சாணைத் தீட்டும்), பொறியினால் தீட்டி பொலிவு பெற்ற அரிய மணிகளும், பொன் நகையும், சந்தனமும், மாலையும் என மற்ற பிற அணிகலன்கள் எவை அணிந்திருந்தாலும், அவை ஆடை உடுத்தியது போன்ற பயனைத் தராது.

பழமொழி சொல்லும் பாடம்: பொருட்செல்வம் ஒருவருக்குப் பெருமை தருவதில்லை, அறிவுடைமையே ஆன்ற பெருமை தரும். அறியாமை நிறைந்தவர் ஒருவர் தான் பொருள் பெற்றிருப்பதை பெருமை என நினைப்பது, ஆடை அணியாது விலையுயர்ந்த அணிகலன்களை மட்டும் அணிந்திருந்திருப்பதை பெருமையாகக் கருதுவதற்கு ஒப்பாகும். அறிவுடைமையின் பெருமையை வள்ளுவர் கூறும் பொழுது,

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். (குறள்: 430)

எதுவும் இல்லாது போனாலும் அறிவுள்ளவர் ஒருவர் எல்லாவற்றையும் பெற்றவராகவே மதிக்கப்படுவார், அறிவில்லாதவர் எல்லாவற்றையும் பெற்றும் அறிவில்லாததால் ஒன்றும் இல்லாதவராகவே கருதப்படுவர் என்கிறார்.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=60787
✓✓✓

291 - எய்ப்புழி வைப்பாம் என

பழமொழி: மச்சேற்றி ஏணி களைவு 


எய்ப்புழி வைப்பாம் எனப்போற்றப் பட்டவர்
உற்றுழி ஒன்றுக் குதவலார், பைத்தொடீஇ!
அச்சிடை யிட்டுத் திரியின், அதுவன்றோ
மச்சேற்றி ஏணி களைவு. 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து:
‘எய்ப்புஉழி வைப்பாம்’ எனப் போற்றப்பட்டவர்
உற்றுழி ஒன்றுக்கு உதவலராய்,-பைத்தொடீஇ!-
அச்சு இடையிட்டுத் திரியின், அது அன்றோ,
மச்சு ஏற்றி, ஏணி களைவு.

பொருள் விளக்கம்:
சோதனைக்காலத்தில் உதவும் வைப்புநிதி போலக் காப்பாற்றுவார் எனக் கருதப்பட்ட உற்றார், நமக்கு இடையூறு நேர்ந்த பொழுது ஒருவகையிலும் உதவாமல் கைவிடும் செயலானது, பசும்பொன்வளையல்களை அணிந்த பெண்ணே! அச்சம் கொண்டு மறுத்துவிடும் அவரதுசெயலானது அல்லவோ, மாடியில் ஏற்றிவிட்ட பின்னர் இறங்க வழியின்றி ஏணியை அகற்றி விடுவதற்கு ஒப்பானது.

பழமொழி சொல்லும் பாடம்:    உதவுவேன் என நம்பவைத்து, உதவி கிடைக்கும் என நம்பி வந்த ஒருவரை, அவர் இடருற்ற நேரத்தில் ஏமாற்றாது உதவுவதே நற்பண்பு கொண்ட ஒருவரின் கடமை. இப்பண்பு இல்லாத, இடருற்ற காலத்தில் உதவாத ஒருவரின் உறவு இருப்பதைவிட இல்லாதிருப்பதே நலம் என்பதை வள்ளுவர்,

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை. (குறள்: 814)

போர்க்களத்தில் உதவ வேண்டிய முக்கியமான நேரத்தில், உதவாது கீழே தள்ளிவிட்டு ஓடிவிடும் மடத்தனம் கொண்ட குதிரையைப் போன்றவர் உறவை பெற்றிருப்பதைக் காட்டிலும் தனித்திருப்பதே சிறப்பு என்று கூறுகிறார்.



நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=62766

Saturday, September 19, 2015

332 - சொல்தொறும் சோர்வு படுதலால்

பழமொழி: கற்றொறும் தான் கல்லாதவாறு


சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதே னென்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித் துழன்றொன் றறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
சொல்தொறும் சோர்வு படுதலால், சோர்வு இன்றிக்
கல்தொறும், ‘கல்லாதேன்’ என்று, வழி இரங்கி,
உற்று ஒன்று சிந்தித்து, உழன்று ஒன்று அறியுமேல்,
கல்தொறும் தான் கல்லாதவாறு.

பொருள் விளக்கம்:
(கற்றறிந்தோருடன் உரையாடுகையில்) செய்துவிடும் சொற்குற்றம் காரணமாகத் தடுமாறினால், அதனால் மனத் தளர்வு கொள்ளாமல், நன்கு கற்றறியும் வரை நான் கல்லாதவரே என்று உணர்ந்து, தனது கல்லாமை நிலைக்காக வருந்தி, மனதை ஒருமைப்படுத்தி கற்பேன் என்ற உறுதிகொண்டு, முயன்று ஒன்றைக் கற்க வேண்டும். அவ்வாறு கற்றறியும் வரை தான் ஒரு கல்லாதவரே என்பதையும் உணர வேண்டும்.

பழமொழி சொல்லும் பாடம்: கல்வி கற்கும் ஒவ்வொருவரும் தான் அதனைக் கற்றறியும் வரை கல்லாதவரே என்பதை உணர்ந்து கற்கவேண்டும். கற்றறிந்தோருடன் அச்சமின்றி உரையாடத் தனது கல்வியறிவை ஒருவர் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை வள்ளுவர்,

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. (குறள்: 725)

கற்றறிந்தோர் அவையில் அச்சமின்றி விவாதிக்க உதவும் வகையில் இலக்கண, இலக்கிய வாதக்கலை ஆகியவற்றைக் கற்றறிந்து திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்கிறார்.

நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=65833



339 - விழுத் தொடையர் ஆகி விளங்கி

பழமொழி: நெய்த்தலைப் பால் உக்குவிடல் 



விழுத்தொடைய ராகி விளங்கித்தொல் வந்தார்
ஒழுக்குடைய ராகி ஒழுகல், – பழத்தெங்கு
செய்த்தலை வீழும் புனலூர! அஃதன்றோ
நெய்த்தலைப்பா லுக்கு விடல். 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து:
விழுத் தொடையர் ஆகி விளங்கி, தொல் வந்தார்
ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல்,-பழத் தெங்கு
செய்த்தலை வீழும் புனல் ஊர!-அஃது அன்றோ
நெய்த்தலைப் பால் உக்குவிடல்.

பொருள் விளக்கம்:
பெருமைதரத்தக்க பாரம்பரியப் பின்னணியுடன், பழம்பெரும் குடிப்பிறப்பைக் கொண்டவர் ஒருவர், சிறந்த ஒழுக்கம் நிறைந்த வாழ்வையும் கடைப்பிடித்தல் (எத்தகையது எனில்), முதிர்ந்த தேங்காய்கள் வயலில் விழும் வளமும், நீர் வளமும் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே; அத்தகைய நிலையன்றோ, பசும் நெய்யில் சிந்திய பால் கலந்துவிட்டது போன்ற நன்மை தருவதை ஒத்தது.

பழமொழி சொல்லும் பாடம்:  நற்குடிப்பிறப்பைக் கொண்டவர், குடிப்பிறப்பின் பெருமையைக் காக்கும் நல்லொழுக்கமும் கொண்டிருப்பதே சிறப்பைத் தரும். நற்குடிப்பிறப்பிற்கேற்ற நல்லொழுக்கத்தின் இன்றியமையாமையை வள்ளுவர்,

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். (குறள் – 133)

ஒருவர் ஒழுக்கமுடையவராக வாழ்வதே நற்குடிப்பிறப்பிற்கேற்ற பண்பாகும், தவறினால் அத்தகவையவர் இழிபிறப்பினராகக் கருதப்படுவர் என்றும்,

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார். (குறள்: 956)

குற்றமற்ற குடிபிறப்பினராக வாழவிரும்புபவர் வஞ்சகச்செயல்களை ஒத்த தகாத செயல்களைச் செய்யார் என்றும் பெருமைமிக்க நற்குடிப்பிறப்பினரின் நல்லொழுக்கத்தின் தேவையை உணர்த்துகிறார்.



நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=61145

385 - ஆறாச் சினத்தன் அறிவு இலன்

பழமொழி: தெளியானைத் தேறல் அரிது 



ஆறாச் சினத்தன் அறிவிலன் மற்றவனை
மாறி யொழுகல் தலையென்ப – ஏறி
வளியால் திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப!
தெளியானைத் தேற லரிது. 

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு) 

பதம் பிரித்து:
ஆறாச் சினத்தன் அறிவு இலன்; மற்று அவனை
மாறி ஒழுகல் தலை என்ப;-ஏறி
வளியால் திரை உலாம் வாங்கு நீர்ச் சேர்ப்ப!-
தெளியானைத் தேறல் அரிது.

பொருள் விளக்கம்:
ஆற்றமாட்டாத சினம் கொண்டவர் அறிவற்ற மூடர்; அவரை விட்டுவிலகி வாழ்வதே நன்மைதரும் (என்பது பெரியோர் வாக்கு). காற்று நீரை வளைத்து வீசுவதால் கரைமேல் அலை உலவும் நாட்டைச் சேர்ந்தவரே, தெளிவற்ற சிந்தனை உடையவரை நம்புதல் நன்மை தராது.

பழமொழி சொல்லும் பாடம்:   கடுஞ்சினத்தை கட்டுப்படுத்தத் தெரியாத அறிவற்றவரின் உறவைத் தவிர்க்க வேண்டும். ஆற்றமாட்டாத சினங்கொண்டவருடன் கொள்ளும் உறவு அவரைச் சேர்ந்தவரையும் அழித்துவிடும் என்பதை,

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். (குறள்: 306)

சினம் என்னும் அழிவுதரும் குணம் அவரைத் தெப்பம் போலக் காக்கும் சுற்றத்தையும் அழித்துவிடும் என வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=61512

390 - எதிர்த்த பகையை இளைது ஆய

பழமொழி: தனிமரம் காடாத லில்



எதிர்த்த பகையை இளைதாய போழ்தே
கதித்துக் களையின் முதிராதே தீர்த்து
நனிநயப்பச் செய்தவர் நண்பெல்லாந் தீரத்
தனிமரம் காடாத லில்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தே
கதித்துக் களையின் முதிராது தீர்த்து,
நனி நயப்பச் செய்தவர் நண்பு எலாம் தீர
தனி மரம் காடு ஆவது இல்.

பொருள் விளக்கம்:
எதிர்த்திடும் பகைவரின் பகைமையை அது தோன்றும் பொழுதிலேயே, விரைந்து நீக்கிப் பகை முற்றவிடாமல் அழித்து, தன்னை விரும்புமாறு பகைவரின் நண்பர்களையும் தம் வசப்படுத்திவிட்டால், தனித்திருக்கும் மரம் காடாகாது அல்லவா (அவ்வாறாகத் தனித்துவிடப்பட்ட பகைவர் தீமை செய்ய இயலாத வகையில் வலுவிழப்பார்)

பழமொழி சொல்லும் பாடம்: பகைவரை வளரவிடாது, அவர் கொண்ட பகைமையை முளையிலேயே கிள்ளி பகையை அடியோடு அழித்துவிட வேண்டும். பகையை வளர விடாது வேரறுக்க வேண்டும் என்ற கருத்தினை வள்ளுவர்,

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. (குறள்: 879)

முள் மரத்தை அது சிறிய செடியாக இருக்கும் பொழுதே வளரவிடாமல் அழித்துவிடவேண்டும். வளரவிட்டு அதை அழிக்க முற்பட்டால் அழிப்பவர் கையை பதம் பார்த்துவிடும் என்று, பகையை அழிக்கும் வழியைக் காட்டுகிறார்.


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=64988